ஃபாக்லாந்து தீவு சர்ச்சை : அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரித்தானியா அடிப்பணியுமா?
ஃபாக்லாந்து ( Falkland Islands) போன்ற ‘அரச ஆதிக்கப் பகுதிகளுக்கு’ அமெரிக்கா வழங்கும் தூதரக ஆதரவை ட்ரம்ப் நிர்வாகம் மறுமதிப்பீடு செய்யவுள்ளதாக வெளியான மின்னஞ்சல் தொடர்பில் டவுனிங் தெரு எதிர்வினையாற்றியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் சேர மறுக்கும் நேட்டோ கூட்டாளிகளுக்கு தண்டனை வழங்கும் விதமாக அமெரிக்காவின் ஆதரவு மறுமதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டவுனிங் தெரு, ‘ஈரான் போர் தொடர்பாக பிரிட்டன் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படாது’ என்றும், தீவுவாசிகளின் சுயநிர்ணய உரிமை முதன்மையானது என்றும் கூறியுள்ளது.
பிரிட்டிஷ் பிரமுகர்கள் சிலர், இந்த அச்சுறுத்தல்களுக்கு இராணுவ ரீதியான தாக்கம் இல்லை அல்லது அவை ‘முற்றிலும் அபத்தமானவை’ என்று நிராகரித்துள்ளனர்.




