இலங்கைமீது தடை விதித்ததா அமெரிக்கா? வெளிவிவகார அமைச்சு கூறுவது என்ன?
இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து, வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவின் இந்த இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary Sanctions) என்பது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது இலங்கையையோ இலக்கு வைத்துப் விதிக்கப்பட்டது அல்ல என இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இது உலகம் முழுவதற்கும் பொதுவாக நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் சாதாரண உலகளாவிய கொள்கை மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசியச் சேவைகளை வழங்கினால்,இலங்கை மீது தடைகள் விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளதாக அமெரிக்காவின் ‘வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ (The Wall Street Journal) செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே வௌிவிவகார அமைச்சு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.




