128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: எந்தெந்த நாடுகளுக்கு வாய்ப்பு?
2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான தகுதிகாண் போட்டிகளின் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ளது.
128 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் மீண்டும் இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. அனைத்து போட்டிகளும் 20க்கு 20 (T20) வடிவில் நடைபெறவுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் ஆசியா, ஐரோப்பா, ஓசியானியா மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்களின் தரவரிசையின் அடிப்படையில் தகுதிபெறவுள்ளன. போட்டியை நடத்தும் அமெரிக்காவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச T20 தரவரிசையில் 15ஆவது இடத்திற்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஒரு இடத்திற்காக தகுதிகாண் போட்டி நடத்தப்படவுள்ளது.
இதுவரை மகளிர் பிரிவில் இந்தியா, இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரேட் பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன. ஆடவர் பிரிவில் இதுவரை எந்த அணியும் தகுதிபெறவில்லை.
இறுதித் தகுதிகாண் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளன. இவை தலா நான்கு அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். குழுக்களில் முதலிடம் பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். அதில் வெற்றிபெறும் அணி ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும்.
ஆடவர் பிரிவுக்கான தகுதிகாண் போட்டிகள் 2028 பெப்ரவரி 5ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை பங்களாதேஷிலும், மகளிர் பிரிவுக்கான போட்டிகள் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை அமெரிக்காவிலும் நடைபெறவுள்ளன.
மேலும், பல நாடுகளைக் கொண்ட ஒருங்கிணைந்த அணியாக இருப்பதால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நேரடியாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது. கரீபியன் பிராந்தியத்திற்கான தனியான தகுதிகாண் போட்டி மூலம் அந்தப் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு தெரிவுசெய்யப்படும்.
கிரிக்கெட் இறுதியாக 1900ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



