தடைசெய்யப்பட்ட அமைப்புகளை நினைவுகூர்ந்தால் சட்டம் பாயும்: அரசு எச்சரிக்கை
“இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை நினைவுகூருவதற்கு அனுமதி அளிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கைகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திலீபன் சிலை விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் மேலும் கூறுகையில்:
“தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை நிர்வகிப்பதில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றது.
தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் நடவடிக்கைகளை நாட்டின் எந்தவொரு பகுதியில் முன்னெடுத்தாலும் — அவ்வாமைப்பின் இலச்சினை, சீருடை என்பவற்றைப் பயன்படுத்தி நாட்டின் இறையாண்மைக்குப் பாதகம் ஏற்படும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தால் — அதற்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும்.
நீங்கள் சுட்டிக்காட்டிய (திலீபன் சிலை )விவகாரம் தொடர்பிலும் பொலிஸார் கண்காணிப்புகளை மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.. நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாகவே எதிர்கால நடவடிக்கைகளும் அமையும்.
ஏதேனுமொரு இனக் குழுமத்தில் உயிரிழந்த தங்கள் உறவினர்களை நினைவுகூருவதற்கு அவர்களின் குடும்பத்தினருக்கு உரிமை உள்ளது. இருப்பினும், தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை மையப்படுத்தி நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டால், அதற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர.




