டெல்லியில் நாளை CJP போராட்டம்: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) டெல்லியில் நாளை (16) நடத்த உள்ள மூவர்ணக் கொடி போராட்டத்துக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) முக்கிய நிர்வாகிகளான அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் உள்ளிட்டோர், டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி கன்னோட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் நாளைய தினம் மூவர்ணக் கொடி போராட்டம் நடத்த அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், சிஜேபியின் இந்த போராட்டம் தங்கள் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றும், எனவே இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி கன்னோட் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த வணிகர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி நிதின் வாசுதேயோ சாம்ப்ரே மற்றும் நீதிபதி சஞ்சய் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வணிகர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் போராட்டம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.




