கருப்பு நட்சத்திரங்களின் ‘பயிற்சி நாயகன்’ ராஜினாமா
AFCON 2027 தகுதிச்சுற்று போட்டியில் காம்பியாவுக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து, கானா தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து Carlos Queiroz விலகியுள்ளார்.
இது ‘பிளாக் ஸ்டார்ஸ்’ (Black Stars) என்று அழைக்கப்படும் கானா அணிக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
போர்த்துகீசியப் பயிற்சியாளரான 73 வயதான Carlos Queiroz-ஐ மீண்டும் நியமித்த ஒரு மாதத்திற்குள்ளேயே, பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் அவருடனான ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கானா கால்பந்து சம்மேளனம் (GFA) வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து Queiroz வெளியிட்ட விடைபெறல் செய்தியில், “இது எளிதான முடிவல்ல. ஆனால் தற்போதைய சூழலில் கானா நாட்டின் கால்பந்து நலனைக் கருத்தில் கொண்டு, இந்த தொழில்முறைப் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே சரியானது என இரு தரப்பும் ஏற்றுக்கொண்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தேவையான சாதகமான சூழல் முழுமையாக அமையவில்லை; சமீபத்திய செயல்பாடுகளும் இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்தன” என்றும் அவர் தெரிவித்தார்.
அக்ரா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற AFCON தகுதிச்சுற்றுப் போட்டியில், காம்பியாவிடம் 4-2 என்ற கோல் கணக்கில் கானா தோல்வியடைந்தது.
இப்போட்டியில் எர்னஸ்ட் நுவாமா மற்றும் பிலிக்ஸ் அபெனா-ஜியான் ஆகியோர் அடித்த கோல்களால் கானா 2-0 என முன்னிலை பெற்றபோதிலும், காம்பியா அணி அடுத்தடுத்து 4 கோல்களை அடித்துத் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
முன்னதாக ஐவரி கோஸ்ட்டிடம் 2-0 எனத் தோல்வியடைந்திருந்த கானா அணி, தற்போது குரூப் C பிரிவில் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.




