தாய்லாந்தில் சோதனை சாவடியில் குண்டுத் தாக்குதல் – 05 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு
தாய்லாந்தின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட தெற்குப் பகுதியில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குல் இடம்பெற்றுள்ளது.
இதில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் வன்முறை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
நாரதிவாட் மாகாணத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் சிலரும் காயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், “தேசியப் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை” ஏற்படுத்திய “ஒரு அப்பட்டமான பயங்கரவாதச் செயல்” என்று விவிரித்துள்ளார்.
அத்துடன் , இது அப்பகுதியில் “அமைதி முயற்சிகளுக்கு ஒரு தடையாக” இருப்பதாகவும் அவர் கூறினார்.
உள்ளூர் ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்ட சிசிடிவி காட்சிகள், கருப்பு உடை அணிந்த ஆறு சந்தேக நபர்கள் ஒரு பிக்கப் டிரக்கில் வந்து இறங்குவதையும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதையும் காட்டுகின்றன. மோட்டார் சைக்கிளில் வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்கள் சுடுவதும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அருகிலுள்ள ஒரு மாவட்டத்தை நோக்கித் தப்பிச் சென்றதாகவும், அதிகாரிகள் அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




