வேல்ஸில் பச்சிளங் குழந்தையின் சடலம் மீட்பு – தாய்க்கு அழைப்பு
வேல்ஸில் உள்ள கடற்கரை பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய் தாமாக முன்வர வேண்டும் என வேல்ஸ் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மெனாய் ஜலசந்தி கடற்கரையோரத்தில் பொதுமக்களில் ஒருவர் சடலத்தை அவதானித்து காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்தே குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் தாயின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவர் தாமாகவே முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பெட்சி காட்வாலட்ர் பல்கலைக்கழக Betsi Cadwaladr University சுகாதார வாரியத்தின் மகப்பேறு மற்றும் பெண்கள் சேவைகள் இயக்குநரான ஃபியோனா ஜிராட் Fiona Giraud, “உங்கள் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில்தான் எங்களின் உடனடி அக்கறை உள்ளது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் பயமாகவோ, மிகுந்த மன அழுத்தத்துடனோ அல்லது அடுத்து என்ன செய்வதென்று தெரியாமலோ இருக்கலாம் என்பதை நாங்கள் உணர்கிறோம்,” என்று தெரிவித்தார்.
குழந்தையின் பாலினம் அல்லது வயது குறித்த எந்தத் தகவலையும் காவல்துறை வெளியிடவில்லை. அதேநேரம் வரும் புதன்கிழமை சிசுவின் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




