பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் விஜயம்: குவாட் மாநாடு குறித்தும் அவதானம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 23ஆவது இந்தியா – ஆசியான் உச்சி மாநாடு மற்றும் 21ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (16) பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்குப் பயணமாகிறார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் அவர், நாளை (17) நடைபெறவுள்ள இரு முக்கிய மாநாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்தியாவுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல் ஆகியவை இம்மாநாடுகளில் முக்கியமாகக் கலந்துரையாடப்படவுள்ளன.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தை மேற்கொள்ளும் மோடி, இன்று அவரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு விருந்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏனைய உலகத் தலைவர்களுடனான இருதரப்புச் சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன.
கடல்சார் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
இந்தியாவும் ஆசியான் அமைப்பும் 2026ஆம் ஆண்டை கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளன.
இந்தப் பின்னணியில், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல், கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வது தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
ஆசியான் அமைப்புடனான உறவுகள் இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய கொள்கையின்’ (Act East Policy) முக்கிய தூணாக விளங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்குப் பிராந்தியச் செயலாளர் ருத்ரேந்திர டாண்டன் தெரிவித்துள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் பேச்சுவார்த்தை
இந்தியா – ஆசியான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதும் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகும்.
தற்போது இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வருடாந்த வர்த்தகப் பெறுமதி சுமார் 122 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
இந்தியா – ஆசியான் சரக்குப் பரிமாற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (AITIGA) மறுபரிசீலனை செய்யும் பேச்சுவார்த்தைகளை விரைவில் நிறைவு செய்வதற்கும் இந்தியா எதிர்பார்த்துள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணை, தென்சீனக் கடல் விவகாரம்
பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பிரம்மோஸ் ஏவுகணை விவகாரமும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2022ஆம் ஆண்டு இந்தியாவுடன் 375 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிலிப்பைன்ஸ், பிரம்மோஸ் அதிவேக ஏவுகணைகளை வாங்கிய இந்தியாவின் முதலாவது வெளிநாட்டு வாடிக்கையாளராக விளங்குகின்றது.
மேலும், தென்சீனக் கடல் விவகாரம், மியன்மாரின் தற்போதைய நிலைமை மற்றும் பிராந்திய பாதுகாப்புச் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளன.
தென்சீனக் கடல் தொடர்பாக ஆசியான் மற்றும் சீனாவுக்கு இடையில் முன்மொழியப்பட்டுள்ள நடத்தை விதிமுறைகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும்.
மணிலாவில் நடைபெறவுள்ள மாநாடுகளுக்கு மத்தியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் (QUAD) தலைவர்கள் மாநாடு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், குவாட் மாநாடு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான தனிப்பட்ட சந்திப்பு தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த விஜயத்தின் மூலம் தென்கிழக்காசிய நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதார, பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது




