ஃபின்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் திருட்டு முயற்சி
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் தொடர்ச்சியான அத்துமீறல் மற்றும் திருட்டு முயற்சிகள் குறித்து விசாரித்து வருவதாக ஃபின்லாந்து அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இது உறுதிப்படுத்தப்பட்டால், அது “ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்று அந்நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் Alexander Stubb விவரித்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் குறித்த ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து, பல அரசியல்வாதிகளின் வீடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அத்துமீறல்கள் மற்றும் ஊடுருவல் முயற்சிகள் நடந்திருப்பது குறித்து நாடாளுமன்றத்திற்குத் தகவல் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜுஸ்ஸி ஹல்லா-அஹோ Jussi Halla-aho உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுக்குத் தெரிந்த சந்தேகத்திற்குரிய சம்பவங்களின் எண்ணிக்கை குறித்து என்னால் துல்லியமாகக் கூற முடியாது. ஆனால் எப்படியாயினும், அந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது,” என்று கூறினார்.
தெரிந்த இந்தச் சம்பவங்கள் நீண்ட கால இடைவெளியில் நடந்துள்ளதாகவும், முதலாவது சம்பவம் சுமார் ஓராண்டுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




