உலகம் செய்தி

அணுவாயுதக் குறைப்புக்கு ஐ.நா. முழு ஆதரவு

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் இந்த வாரம் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டின் ஊடாக அணுவாயுதக் குறைப்பு தொடர்பான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டால், அவற்றுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள அவர், திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அணுவாயுதக் குறைப்பு திட்டமொன்று உருவாக்கப்பட்டால், அதில் ஐக்கிய நாடுகள் சபை முழுமையாகப் பங்கேற்று, அதன் வெற்றிக்கு பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இத்தகைய உடன்பாட்டை எட்டுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் குட்டரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி சீனாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது அணுவாயுதங்களைக் குறைப்பதற்கான முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்படும் என வெள்ளை மாளிகை கடந்த வாரம் அறிவித்திருந்தது.

ஆசியாவுக்கான நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ட்ரம்ப், செவ்வாய்க்கிழமை பிலிப்பைன்ஸில் ஆசியான் தலைவர்களைச் சந்திப்பதுடன், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் (QUAD) அமைப்பின் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.

இதற்கிடையில், சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டையொட்டி, ட்ரம்ப், புட்டின் மற்றும் ஷி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த முத்தரப்புச் சந்திப்பில் அணுவாயுதக் குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற ட்ரம்பின் நிலைப்பாடு, சீனாவின் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுடன் தனது அணுவாயுதத் திட்டம் தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நீண்டகாலமாகத் தவிர்த்து வரும் சீனா, அணுவாயுதக் கையிருப்பு அதிகமாகக் கொண்டுள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதே பொருத்தமானது எனத் தெரிவித்துள்ளது.

உலக வல்லரசுகளுக்கு இடையிலான அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களும் போட்டிகளும் அணுவாயுத அச்சுறுத்தலை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றது.

இதேவேளை, ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான இராஜதந்திரத் தீர்வொன்றை எட்ட வேண்டும் என்ற ஐ.நா.வின் நிலைப்பாட்டையும் குட்டரெஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய போர் மற்றும் அமைதியற்ற சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் தீவிரமான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய மோதல் நிலைமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் குட்டரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி