கண்ணீர் குளமானது வல்வெட்டித்துறை: சிவாஜிலிங்கத்தின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழ் தேசிய மூத்த அரசியல் தலைவரான மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நடைபெற்றன.
“எங்களுக்கு இனி யாரய்யா இருக்கின்றார்கள், நீங்கள் முன்னுக்கு நிற்பீர்கள் என்ற துணிவுடன்தானே நாங்கள் போராட்டக் களங்களில் அணிவகுத்தோம். இனி யார் எமக்கு முன்னிற்கப் போகின்றார்கள்?” என்று இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்ட மக்கள் கதறியழுதனர்.
முன்னதாக அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியை நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சிவாஜிலிங்கத்தின் புகழுடல் சுமந்த சந்தனப் பேழை தாங்கிய ஊர்தி, மக்கள் திரளுக்கு மத்தியில் கடற்கரை வீதியூடாக வல்வெட்டித்துறை நகர சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு நகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் அன்னாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ஊர்திப் பயணத்தின் ஊடாக வல்வெட்டித்துறை நகரின் மத்தியில் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் புகழுடல் வைக்கப்பட்டு, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் வடமராட்சி அமைப்பாளருமான வி.கவிச்செல்வன் தலைமையில் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் செயலாளர் ஆவல் கணேசன் ஆகியோர் பலாலி சர்வதேச விமான நிலையத்தினூடாக வருகை தந்து சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தியமையுடன் புகழஞ்சலி உரைகளையும் நிகழ்த்தினர்.
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான (பி2பி) மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீனத்தின் முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை ஜெகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமையுடன் புகழஞ்சலி உரைகளையும் நிகழ்த்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், ஜீவன் தொண்டமான், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமையுடன் புகழஞ்சலி உரைகளையும் நிகழ்த்தினர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.சிறீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வீ.ஆனந்தசங்கரி, செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்டோரும் புகழஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.
யாழ். மாநகர சபை மேயர் வி.மதிவதனி, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஷ், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், பருத்தித்துறை நகர சபைத் தவிசாளர் வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் யாழ். மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன், ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், அனந்தி சசிதரன், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், ச.சுகிர்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், போராளிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து, சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தமிழர் பாரம்பரிய முறையில் பூந்தண்டிகை பாடையில் சுமந்தவாறு வல்வெட்டித்துறை – ஊறணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மாலை 4 மணியளவில் தகனக்கிரியைகள் நிறைவேற்றப்பட்டன.
ஆயிரக்கணக்கான மக்களின் கதறலுக்கு மத்தியில் சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தீயுடன் சங்கமானது.






