அனோஜன் விவகாரம் – மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தி
அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றத்தில் (Supreme Court) மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வழக்கறிஞர்கள் குழுவின் ஆலோசனைகளைத் தொடர்ந்து, இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் முகப்புத்தகத்தில் (Facebook) பதிவிட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், சவூதி அரேபியாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்த கீழ் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை, இரத்து செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இக்குற்றச்சாட்டை இஸ்லாமிய சட்டத்தின் கீழ் இறைவனுக்கு எதிரானதாகக் கருதப்படும் ‘ஹத்’ (Hadd) வகைக் குற்றமாக நீதிமன்றம் வகைப்படுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளில் உதவுவதற்காக இலங்கை வழக்கறிஞர்கள் குழுவொன்று சவூதி அரேபியாவுக்குச் சென்றது.
சிவராசாவின் வழக்கை கையாளும் வழக்கறிஞர்களுடன் இக்குழு பல சுற்று ஆலோசனைகளை நடத்தியதுடன், சட்டரீதியான வாதங்கள் மற்றும் ஆவணங்களை இறுதி செய்வதிலும் உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




