ஐரோப்பா செய்தி

பிரித்தானிய இளவரசர் மாளிகைக்குள் அத்துமீறில்: இருவர் கைது

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோருக்குச் சொந்தமான நாட்டுப்புற மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோருக்குச் சொந்தமான நாட்டுப்புற மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள நோர்போக் (Norfolk) பிராந்தியத்தில் அமைந்துள்ள அரச குடும்பத்துக்குச் சொந்தமான சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் (Sandringham Estate) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள அன்மர் ஹால் (Anmer Hall) எனப்படும் 10 படுக்கையறைகளைக் கொண்ட மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான நடமாட்டம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். இதன்போது பொலிஸ் நாய்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பொலிஸ் ஹெலிகொப்டர் ஆகியவற்றின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கொள்ளை மற்றும் அத்துமீறி நுழைதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்போக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்றபோது குறித்த மாளிகையில் எவரும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளும் சம்பவம் இடம்பெற்றபோது அங்கு இருக்கவில்லை என தி சன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு திருமணப் பரிசாக மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியால் இந்த மாளிகை வில்லியம் – கேட் தம்பதியருக்கு வழங்கப்பட்டது. விடுமுறை மற்றும் குறுகிய ஓய்வுக் காலங்களில் அவர்கள் இந்த மாளிகையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களின் பிரதான வசிப்பிடம் லண்டனுக்கு மேற்கே அமைந்துள்ள வின்ட்சர் கோட்டைத் தோட்டத்தில் உள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இளவரசர் வில்லியத்தின் பேச்சாளர், அரச குடும்பத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி