இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல்
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 17 வரை மொத்தம் 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஜனவரி 1 முதல் செப்டம்பர் 17 வரையிலான காலப்பகுதியில் 14 T-56 ரக துப்பாக்கிகள், 33 பிஸ்டல்கள் மற்றும் 25 ரிவால்வர்கள் உட்பட மொத்தம் 891 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கைகளின் மூலம் 74 T-56 ரக துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 2,404 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 35 திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இக்காலப்பகுதியில் மொத்தம் 40 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் விளைவாக 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




