விபத்தில் இளம் பெண் பலி: மலையகத்தில் சோகம்
நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தொழில் நிமித்தம் இன்று காலை நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி அவர் மோட்டார் சைக்கிளில் (இஸ்கூட்டி) பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் 42 வயதான வேன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




