ஐரோப்பா செய்தி

ட்ரம்பின் பாதுகாப்பு நகர்வுக்கு கிரீன்லாந்து பச்சைக்கொடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு கிரீன்லாந்து நாடாளுமன்றம் இன்று (03) ஒப்புதல் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு கிரீன்லாந்து நாடாளுமன்றம் இன்று (03) ஒப்புதல் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் நடைபெற்ற முதற்கட்ட விவாதத்தின்போது, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

டென்மார்க்கின் சுயாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாக ட்ரம்ப் தொடர்ச்சியாக வெளியிட்ட கருத்துகளால் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையே ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், கடந்த செப்டெம்பர் மாதம் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் இராணுவப் பங்களிப்பு விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக இரண்டு இராணுவத் தளங்களை அமைப்பதற்கும், ட்ரம்ப் முன்மொழிந்துள்ள “கோல்டன் டோம்” ஏவுகணைப் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கிரீன்லாந்தின் மீதான டென்மார்க்கின் இறையாண்மையும், தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கிரீன்லாந்து மக்களின் உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்படுவது கிரீன்லாந்துக்கு மற்றுமொரு முக்கியமான படியாகும் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மியூட் எகெடே தெரிவித்துள்ளார்.

“இந்த நிலையை அடைவதற்கான பாதை எமது மக்களுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. இருப்பினும், எமது அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாக நின்று, பேச்சுவார்த்தையைத் தெரிவுசெய்து, நாட்டின் நலன்களுக்குப் பொறுப்பேற்றுள்ளோம்” என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை தொடர்பான விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான சட்டமூலம் நவம்பர் 11ஆம் திகதி டென்மார்க் நாடாளுமன்றத்தில் முதற்கட்டமாக விவாதிக்கப்படவுள்ளது. தொடர்ந்து, நவம்பர் 19ஆம் திகதி இரண்டாம் கட்ட விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.

டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய இரண்டும் ஒப்புதல் வழங்கிய பின்னரே இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இதற்கு அமெரிக்க செனட் சபையின் ஒப்புதல் அவசியமில்லை என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி