கஸ்ஸப தேரர் குழுவுடன் முரண்பட்ட ராஜாங்கன தேரர் கைது
அநுராதபுரத்தில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது குழப்பமான முறையில் நடந்துகொண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், ராஜாங்கன சத்தரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (18) அநுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர், அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 12ஆம் திகதி, அநுராதபுரம் புனித நகரப் பகுதியில் அமைந்துள்ள ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் நடைபெற்ற போராட்டத் தளத்தில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிலர், குறித்த இடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ராஜாங்கன சத்தரதன தேரர் தலைமையிலான குழுவினர் அங்கு வருகை தந்துள்ளனர். இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலின்போது ராஜாங்கன சத்தரதன தேரரின் தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பலரைக் கைது செய்து பொலிஸ் காவலில் எடுத்திருந்தனர்.




