லிபியாவில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: 40 இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் மீட்பு
லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கடலோர நகரமான டெர்னாவில், 40 இலட்சத்துக்கும் அதிகமான போதைப்பொருள் மாத்திரைகளும், 29 கிலோ கொக்கைன் மற்றும் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த பலர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, லிபிய உள்துறை அமைச்சின் போதைப்பொருள் ஒழிப்புப் பொது நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் புகைப்படங்களையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அவற்றில் கஞ்சா கட்டிகள், பெட்டிகள் மற்றும் வெள்ளை நிற மாத்திரைகள் அடங்கிய வெளிப்படையான பைகள் காணப்படுகின்றன.
“எமது இளைஞர்களின் பாதுகாப்புக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தத் துணியும் எவரிடமும் எந்தவிதமான கருணையும் காட்டப்படமாட்டாது” என அந்தப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அஹ்மத் அல்-ஷாமிக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, செயற்கை போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை வட ஆபிரிக்கா மற்றும் ஆபிரிக்கக் கண்டத்தின் ஏனைய பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் முக்கியப் போக்குவரத்து மையமாக லிபியா மாறியுள்ளது.
2011ஆம் ஆண்டு முதல் நாட்டில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களையும் பாதுகாப்பற்ற சூழலையும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2011ஆம் ஆண்டு நேட்டோ ஆதரவுடன் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தொடர்ந்து முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இதனையடுத்து லிபியா நீண்டகால உள்நாட்டுப் பூசல்களிலும் அரசியல் பிளவுகளிலும் சிக்கியது.
2014ஆம் ஆண்டு ஆயுதக் குழுக்களுக்கு இடையே உள்நாட்டுப் போர் வெடித்ததையடுத்து, நாடு கிழக்கு மற்றும் மேற்கு நிர்வாகங்களாகப் பிரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




