இலங்கையுடன் உறவை வலுப்படுத்துகிறது பங்களாதேஷ்: அநுரவுக்கு விசேட அழைப்பு
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷிற்கு அரச விஜயத்தை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மானினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிதழ், பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையூன் கபீரினால் (Humaiun Kobir) இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அரசியல், வர்த்தகம், கலாசாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பங்களாதேஷ் பிரதமர் உள்ளடங்கலான அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், அத்திட்டங்கள் பங்களாதேஷிற்கு முன்மாதிரியாக இருக்கும் எனவும் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தி, ஆடைத் தொழில், சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு, பங்களாதேஷின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.





