பிரித்தானியா விலிருந்து ‘ஆகாயப் பேய்களை’ அமெரிக்கா மீளப்பெற்றது ஏன்?
பிரித்தானியாவில் உள்ள RAF Fairford விமான படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது B-1 ரகப் போர்க்காலக் குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா அங்கிருந்து அவசரமாகத் திரும்பப் பெற்று, மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்துக் கொண்டுள்ளது.
ஈரானால் ஏதோவொரு வடிவில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என ஐயப்பாடுகள் வெளியிடப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இத்தளத்தின் அருகில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகச் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்கா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
பிரித்தானியப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) இத்தாக்குதல் சதித்திட்டத்தின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பிரித்தானியாவிலுள்ள அமெரிக்க இராணுவ சொத்துகளுக்கு ஈரானால் கடுமையான அச்சுறுத்தல் நிலவுகிறது” என்று நேட்டோ (NATO) இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தளத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 5 இளைஞர்கள் மற்றும் பிரித்தானிய-ஈரானிய இரட்டைக் குடியுரிமை பெற்ற மற்றொருவர் என மொத்தம் 6 பேரை பிரித்தானியக் காவல்துறை கைது செய்தது. இருப்பினும், அவர்கள் அனைவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என ஈரான் மறுத்துள்ளது. “சந்தேக நபர்களை பிணையில் விடுவித்ததே இது ஒரு சோடிக்கப்பட்ட கதை என்பதற்குச் சான்று” என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) தெரிவித்துள்ளார்.
இச்சதித்திட்டம் மூலம் பெரும் சேதத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சந்தேக நபர்களைப் பிணையில் விடுவித்த பிரித்தானிய அரசின் நடவடிக்கைக்குத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மீது ‘தற்காப்புத் தாக்குதல்களை’ நடத்த மட்டுமே பிரித்தானியா தனது விமானப்படைத் தளத்தைப் பயன்படுத்த அனுமதித்திருந்தது. நேரடித் தாக்குதல்களுக்கு அனுமதி மறுத்ததால், வழக்கமாக மிக நெருங்கிய கூட்டாளிகளாக இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையே உறவில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது.
தற்போது RAF Fairford தளத்திலிருந்து B-1 விமானங்கள் திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், உலகின் எந்தப் பகுதியிலும் துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்கப் படைகள் எப்போதும் தயாராகவே உள்ளதாக பென்டகன் (Pentagon) தெரிவித்துள்ளது.




