நேட்டோ அமைப்பை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்
ஈரான் மீதான அமெரிக்காவின் போருக்கு ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள் போதிய ஆதரவை வழங்கவில்லை என சுட்டிக்காட்டி, அந்நாடுகள்மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
தமது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகப் பதிவில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்களுக்கு இடையே உள்ள பெரும் முரண்பாட்டை ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், நேட்டோ அமைப்பிற்கான வாஷிங்டனின் பங்களிப்பை “வேடிக்கையானது” (Ridiculous) என்று வர்ணித்துள்ளார்.
“அவர்கள் நமக்காக அங்கு இருக்கவில்லை ” என்று ட்ரம்ப் தனது பதிவில் எழுதியுள்ளார்.
ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்கள், ஒவ்வொரு நாடும் தங்களது சொந்த ஆயுதப் படைகளுக்காக எவ்வளவு செலவிடுகின்றன என்பதைக் குறிப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து அல் ஜசீரா (Al Jazeera) ஊடகம், நேட்டோ அமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், ஒரு சில சிறிய முரண்பாடுகளைத் தவிர, ட்ரம்பின் தரவுகள் ஒட்டுமொத்தமாக நேட்டோவின் புள்ளிவிவரங்களுடன் ஒத்துப்போகின்றன.
துருக்கியின் தலைநகரான அங்காராவில் நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டிற்கு முன்னதாக ட்ரம்பின் இந்த சமூக ஊடகப் பதிவு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





