புதிய தாக்குதல்களுக்கு தயாராகும் அமெரிக்கா – ஈரான் பகிரங்க எச்சரிக்கை
மத்தியக் கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவுகின்ற நிலையில், அமெரிக்கா அதன் கூட்டாளிகளுடன் இணைந்து புதிய தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் இன்று (20.09) இது தொடர்பில் அறிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் தளங்கள் மற்றும் நலன்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், வொஷிங்டனின் பிராந்தியக் கூட்டாளிகளும் இமோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினராகக் கருதப்படுவார்கள் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
இதேவேளை நடத்தப்படவுள்ளதாக கூறப்படும் தாக்குதல் குறித்த கூடுதல் விபரங்களை ஈரான் வெளியிடவில்லை.
இதற்கிடையே மத்திய கிழக்கில் எதிர்பாராத விதமாக மோதல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும், எனவே அமெரிக்கர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் அல்லது வான்வெளி மூடப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் மோதல் தொடங்கி ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆகியும், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான முக்கிய விட்டுக்கொடுப்புகளைச் செய்ய இரு தரப்பும் தயாராக இல்லை.
மேலும், உலகளாவிய எரிசக்திச் சந்தைகள் ஏற்கனவே நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த மோதல் இப்பிராந்தியத்தில் பிற நெருக்கடிகளையும் உருவாக்கும் வகையில் தொடர்ந்து பரவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.




