18 மாதங்களாக விசாரணையின்றி சிறை: காஸா வைத்தியருக்காக ஐநா குரல்
எந்தவொரு குற்றச்சாட்டுகளுமின்றி 18 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐ.நா. சபையின் விசாரணை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
காஸாவின் கமால் அத்வான் மருத்துவமனையின் 52 வயதான பணிப்பாளர் ஹுசாம் அபு சபியா (Hussam Abu Safia) தொடர்ச்சியான மற்றும் கடுமையான சித்திரவதைகளை எதிர்கொண்டு வருவதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்கான ஐநாவின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தினசரி சித்திரவதைகள் காரணமாக டாக்டர் அபு சபியாவின் உடல்நிலை கடுமையான ஆபத்தில் இருப்பதாக அவரது சட்டத்தரணி நாசர் ஓடே (Nasser Odeh) எச்சரித்துள்ளார்.
அவர் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிவதாக மனித உரிமை அமைப்புகளும் அவரது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் அவரை நேரில் சந்தித்த போது, அவர் மிகக் கொடூரமாகக் காயப்படுத்தப்பட்டிருந்ததால், அவரைக் அடையாளம் கண்டுகொள்வதற்கே தான் சிரமப்பட்டதாக சட்டத்தரணி நாசர் ஓடே குறிப்பிட்டுள்ளார் என ‘இஸ்ரேல் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு’ (Physicians for Human Rights Israel) தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், இஸ்ரேலிய நீதிமன்றத்தில் காணொளி மூலம் அபு சபியா ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரது முகமும் உடலும் கணிசமான அளவு மெலிந்து, மிகவும் பலவீனமாகக் காணப்பட்டார்.
“டாக்டர் அபு சபியா மற்றும் இஸ்ரேலால் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மருத்துவப் பணியாளர்களையும் உடனடியாக, நிபந்தனையின்றி, பாதுகாப்பாக விடுதலை செய்ய வேண்டும் என இந்த ஆணையம் கோருகிறது.
அத்துடன், அவருக்கு உடனடியாக ஒரு சுதந்திரமான மருத்துவக் குழுவின் சிகிச்சையை வழங்க இஸ்ரேலிய அதிகாரிகள் முன்வர வேண்டும்” என அந்த ஆணையம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
தற்போது எந்தவித குற்றச்சாட்டுகளுமின்றி இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள காஸாவைச் சேர்ந்த 14 பாலஸ்தீன மருத்துவர்களில் அபு சபியாவும் ஒருவர் ஆவார்.
தனது கைதுக்கு முன்பு வரை, காஸாவின் சீரழிந்த சுகாதாரத் துறை குறித்து சர்வதேச அளவில் குரல் கொடுத்து வந்தவர் என்பதும், இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் தனது மகன்களில் ஒருவரை இழந்த நிலையிலும் அவர் தொடர்ந்து மருத்துவப் பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




