கருங்கடல் விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை பாராட்டும் உக்ரைன்
கருங்கடலில் (Black Sea) சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் இந்தியாவின் பங்களிப்பை உக்ரைன் பெரிதும் மதிப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது அமர்வின் இடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் அந்த்ரி சிபிஹா ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இச்சந்திப்பு குறித்து ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா, அமைதி முயற்சிகள், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“அமைதி முயற்சிகள், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நிலவரங்கள் குறித்து டாக்டர் எஸ். ஜெய்சங்கருடன் விவாதித்ததில் மகிழ்ச்சியடைடைகிறேன்.
கருங்கடலில் நிலவும் சூழல் மற்றும் சந்தையில் அதன் தாக்கம் குறித்து நாங்கள் பேசினோம். உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மிக அவசியமானது.
இதில் ஆக்கபூர்வமான பங்கை ஆற்ற உக்ரைன் தயாராக உள்ளதுடன், இந்தியாவின் ஈடுபாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், அறிவியல், கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் தீவிரக் கூட்டாண்மையை ஏற்படுத்த உக்ரைன் ஆர்வமாக உள்ளதாகவும், விரைவில் நடைபெறவுள்ள இருதரப்பு அரசுகளுக்கு இடையேயான ஆணைக்குழுவின் கூட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “எனது சமீபத்திய உக்ரைன் பயணத்திற்குப் பிறகு, வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹாவை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றதை வரவேற்கிறேன்.
கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து எங்கள் உரையாடல் அமைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.




