ட்ரம்பின் 15 அம்சத் திட்டம் நிராகரிப்பு – படைகளை திரும்பப் பெற வாய்ப்பில்லை
ஹமாஸ் “உண்மையாகவே” ஆயுதங்களைக் கைவிடும் வரை இராணுவப் படைகள் திரும்பப் பெறப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அத்துடன் , காசாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 15 அம்சத் திட்டத்தையும் நிராகரித்துள்ளார்.
காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களின் “முழுமையான ஆயுதக் கைவிடுதலுக்கான” உடன்பாட்டை எட்டியுள்ளதாக ட்ரம்பின் அமைதி வாரியம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
ஆனால், இஸ்ரேல் “அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளையும்” முடிவுக்குக் கொண்டுவந்து, காசாவிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற்றால் மட்டுமே, தனது கனரக ஆயுதங்களை ஒப்படைப்பது சாத்தியம் என்று ஹமாஸ் கூறியுள்ளது.
இதற்கு இஸ்ரேல் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இருப்பினும் ஹமாஸ் தரப்பினர் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, “15 அம்ச ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது,” என்று உறுதிப்பட தெரிவித்தார்.
“ஹமாஸ் உண்மையாகவே ஆயுதங்களைக் கைவிடும் வரை இஸ்ரேலிய இராணுவம் எந்தவொரு படைத் திரும்பப் பெறுதலையும் மேற்கொள்ளாது, மேலும் நமது படைகளுக்கும் நமது குடிமக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து முறியடிக்கும்,” என்றும் அவர் கூறினார்.




