ஐரோப்பிய கார்கள் மீது 25% சுங்கவரி- ட்ரம்ப் அறிவிப்பு, வர்த்தக பதற்றம் அதிகரிப்பு
அமெரிக்கா–ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது சுங்க வரியை 25% ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்டுள்ளார்.
“நாங்கள் முழுமையாக ஒப்புக்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றவில்லை” என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதற்கான குறிப்பான காரணங்களை அவர் விளக்கவில்லை.
தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்தின் படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கு 15% சுங்கவரி விதிக்கப்பட்டு வருகிறது. இதை 25% ஆக உயர்த்தும் புதிய முடிவு, இரு தரப்புகளுக்குமிடையிலான வர்த்தக மோதலை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஃகு மற்றும் அலுமினியம் தொடர்பான முந்தைய சர்ச்சைகளால், இரு தரப்புகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே மந்தமாகியுள்ளன. ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற முக்கிய ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் சுங்கவரி திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஐரோப்பாவுக்கு கார் தொழில் முக்கியமான பொருளாதார துறையாக இருப்பதால், இந்த முடிவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.




