AI தொழில்நுட்பத்துக்கு கட்டுப்பாடு: உலக தலைவர்களின் யோசனைக்கு ட்ரம்ப் எதிர்ப்பு
செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்திற்கு உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரி நேற்று அவசர வேண்டுகோள் விடுத்த 22 உலகத் தலைவர்களில் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸும் (Anthony Albanese) ஒருவர்.
ஆனால் இந்த முன்மொழிவை கடுமையாக சாடிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “தொழில்துறை புரட்சியை விடப் பெரியதாக உருவெடுக்கவுள்ள ஒரு விஷயத்தின் வளர்ச்சியை அமெரிக்கா தடுக்காது” என்று கூறினார்.
பிரித்தானியப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) தனது உரையில் இந்த ஒப்பீட்டைக் குறிப்பிட்டு, தொழில்துறை புரட்சியானது தொழிலாளர்களுக்கு “பெரும் துன்பத்தையும் சுரண்டலையும் கொண்டு வந்தது” எனச் சுட்டிக்காட்டினார்.
“நிலைமை சீரடைவதற்கு முன்பாக மிகவும் மோசமடைந்தது. எனவே, இம்முறை நாம் இதனைச் சரியாகச் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
மேலும், அடுத்த ஆண்டு G20 அமைப்பிற்கான தலைமையை பிரித்தானியா பொறுப்பேற்கும் போது, AI தொழில்நுட்பத்தை அதனுள் முக்கியப் பொருளாக வைக்கும் என Andy Burnham தெரிவித்தார்.
“உலகளாவிய ஒற்றைக் கொள்கைகள் மற்றும் தரநிலைகளை ஒப்புக்கொள்வதை நோக்கி நாங்கள் பணியாற்றுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிரம்பின் கருத்துக்களுக்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்த அல்பானீஸ், சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் மேற்கொள்ளவுள்ள உச்சிமாநாட்டில் AI விவாதிக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
“அந்தச் சந்திப்பில் என்ன முடிவுகள் வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்,” என்று அல்பானீஸ் கூறினார்.
இதனிடையே, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கென்யா நாட்டுத் தலைவர்களுடன் இணைந்து கலந்துகொண்ட ஒரு பக்கவாட்டு நிகழ்வில், AI அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான “வழிகாட்டு வரைபடத்தை” (Road map) அல்பானீஸ் தொடங்கி வைத்தார். சமூக ஊடகங்கள் விஷயத்தில் நாம் செய்தது போல, நடவடிக்கை எடுக்க அதிக காலம் தாமதிக்கக் கூடாது என அவர் எச்சரித்தார்.
சமூக ஊடகங்களுக்கான வயது வரம்பைக் குறிப்பிட்ட அவர், “நாம் முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்றார்.
சமீபகாலமாக விவாதப் பொருளாக இருக்கும் கட்டுப்பாடற்ற ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ ஆபத்துகளில் இருந்து மாறுபட்ட பிற முக்கியச் சவால்கள் மீது இந்த வழிகாட்டு வரைபடம் கவனம் செலுத்துகிறது.
அதில் சாட்பாட் (chatbot) பாதுகாப்பு, AI மூலம் உருவாக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள், ஆபாச டியீப்ஃபேக் (deepfakes) காட்சிகள் மற்றும் AI பற்றிய விழிப்புணர்வு ஆகியவை அடங்கும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்கள் இந்த ஆண்டின் இறுதியில் பாரிஸில் நடைபெறும் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




