தென்கொரியாவில் கோர விபத்து: இரு இலங்கைத் தொழிலாளர்கள் பலி
தென்கொரியாவின் ஹ்வாசொங் (Hwaseong), கியோங்கி மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த நவம்பர் 26ஆம் திகதி இரவு 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
30 வயதுடைய இரு இலங்கைத் தொழிலாளர்களும் அருகிலுள்ள தொழிற்சாலையில் பணிகளை நிறைவு செய்துவிட்டு, தங்குமிடத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வீதியில் பயணித்த சரக்குப் போக்குவரத்து லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட மரத்தினாலான வீட்டின் கூரையின் ஒரு பகுதி, லொறியிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த நிலையில், வீதியோரமாக நடந்து சென்ற இரு இலங்கையர்களையும் தாக்கியுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற வீதியில் பாதசாரிகளுக்கான நடைபாதை வசதி இல்லாததால், அவர்கள் வீதியோரமாக நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய லொறி சாரதி, வீதியின் முன்னால் உள்ள நிலைமையைச் சரியாக அவதானிக்கத் தவறியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்து இடம்பெற்றபோது சாரதி மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் பாவனையிலோ இருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், லொறி சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள தென்கொரிய பொலிஸார், சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கான பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இரு இலங்கைத் தொழிலாளர்களின் அடையாளங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.




