FIFA மீது சைபர் தாக்குதல்: முக்கிய தகவல்கள் ஹேக்கர்களின் கைகளில்
சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில், தனிப்பட்ட மற்றும் வர்த்தகத் தகவல்கள் ஊடுருவல்காரர்களால் அணுகப்பட்டுள்ளதாக FIFA உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலின் மூலம் FIFA நிறுவனத்துக்குச் சொந்தமான சில இரகசியத் தகவல்களுக்கு அனுமதியற்ற அணுகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடுருவல்காரர்கள் FIFA ஊழியர்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து நிறுவனத்தின் தகவல் கட்டமைப்புக்குள் நுழைந்துள்ளதாக ESPN ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், FIFA நிறுவனத்திடம் உள்ள மொத்தத் தரவுகளில் 0.1 சதவீதத்திற்கும் குறைவான தகவல்களே இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ‘Handsome Boy Hacking Club’ என அடையாளப்படுத்திக்கொண்ட ஹேக்கர் குழுவொன்று, இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. குறித்த குழு FIFA தொடர்பான ஆவணங்கள் எனக் கூறப்படும் சில திரைப்பிடிப்புகளையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் FIFA வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவியல் சைபர் தாக்குதலால் வரையறுக்கப்பட்ட அளவிலான தனிப்பட்ட மற்றும் வர்த்தகத் தகவல்களுக்கு அனுமதியற்ற அணுகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், சட்ட அமுலாக்கப் பிரிவினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் FIFA தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட தகவல்களைச் சட்டவிரோதமாகப் பெற்றுக்கொள்வதும் வெளியிடுவதும் தனியுரிமைக்கு எதிரான கடுமையான மீறல் என FIFA கண்டனம் தெரிவித்துள்ளது.



