உலகம் சிக்கலாகவும், அமைதியற்றதாகவும் மாறும் – நியூசிலாந்து அமைச்சர் எச்சரிக்கை
உலகம் மேலும் சிக்கலாகவும் அமைதியற்றதாகவும் மாறும் என்று நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் Winston Peters , இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பசிபிக் பிராந்தியத்தில் நடக்கும் விரும்பத்தகாத புவிசார் அரசியல் சூழ்ச்சிகளைக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா இதில் தலையிட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
நவம்பர் மாதம் 07 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவர் ஆற்றிய இறுதி உரையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி அல்லது போதுமான முன்னறிவிப்பின்றி ஏவுகணைகள் சோதிக்கப்படுவதையும், கடற்படைப் பயிற்சிகள் மேலும் மேலும் தெற்கு நோக்கி நகர்வதையும், ஒழுங்கமைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்றங்களால் பசிபிக் அண்டை நாடுகளுக்கும் நியூசிலாந்துக்கும் ஏற்படும் அச்சுறுத்தலையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“அமெரிக்கா ஒரு பசிபிக் சக்தியாகும், மேலும் பிராந்தியத்தின் செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு ஆதரவாக பசிபிக்கில் ஈடுபாடுள்ள அமெரிக்கா நமக்குத் தேவை,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளியுறவு அமைச்சராக தனது மூன்றாவது பதவிக்காலத்தில் பணியாற்றும் பீட்டர்ஸ், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான திறனை வளர்த்துக்கொள்ள பசிபிக் நாடுகளுக்கு உதவுவதில் வொஷிங்டனுக்கு ஒரு முக்கியப் பங்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.




