போருக்கு நடுவே 18 மில்லியன் பீபாய் எண்ணெயை பாதுகாப்பாக கொண்டுச்சென்ற அமெரிக்கா
ஈரான் – அமெரிக்க போரின் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் இறக்குமதிக்கு நாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா 18 மில்லியன் பீப்பாய் எண்ணெயை பாதுகாப்பாக கொண்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 40 வர்த்தகக் கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க அமெரிக்கா இராணுவம் பாதுகாப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் புதிய சுற்றுத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிஎன்என் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்குவதற்கு முன்பு ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக நாளொன்றுக்கு சுமார் 20 மில்லியன் பீப்பாய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், போரின் விளைவுகளால் அந்த அளவு வெகுவாக குறைந்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த திடீர் நடவடிக்கையானது மத்தியக்கிழக்கில் இப்போதைக்கு போர் நிறைவுக்கு வராது என்பதை காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் , ட்ரம்ப் நிர்வாகம் தனது இராணுவ உத்தியை ஹோர்முஸ் ஜலசந்தியில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது. அங்குள்ள நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், ஈரானிய துறைமுகங்களுக்குள் எண்ணெய் ஏற்றுமதி நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்கவும் அமெரிக்க மத்திய கட்டளைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் சில பகுதிகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பிற முன்னுரிமைகள், தற்போதைக்கு திறம்பட “பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன” என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.




