ரியல் மட்ரிட் இயக்குநராகிறார் டென்னிஸ் ஜாம்பவான் நடால்
22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் நட்சத்திரம் ரபேல் நடாலை Rafael Nadal , தனது நிர்வாகக் குழுவில் இயக்குநராக நியமிக்க ரியல் மட்ரிட் கால்பந்து கழகம் தீர்மானித்துள்ளது.
இந்த நியமனத்தை உறுப்பினர்களின் அங்கீகாரத்துக்காகப் பொதுச் சபையில் சமர்ப்பிக்க நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. நடால் ஏற்கனவே ரியல் மட்ரிட் கழகத்தின் கௌரவ உறுப்பினராக உள்ளார்.
92 ஒற்றையர் பட்டங்கள், இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், ஸ்பெயின் அணிக்காக ஐந்து டேவிஸ் கிண்ண வெற்றிகள் மற்றும் உலகின் முதல்நிலை வீரர் என்ற பெருமை உள்ளிட்ட சாதனைகளை ரியல் மட்ரிட் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
விளையாட்டுச் சாதனைகளுக்கு அப்பால், பணிவு, எதிராளிகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயல்படுதல் போன்ற நடாலின் பண்புகளும் கழகத்தின் அடையாளத்துடன் ஒத்துப்போவதாக ரியல் மட்ரிட் தெரிவித்துள்ளது.
இந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள நடால், கழகத் தலைவர் புளோரன்டினோ பெரெஸ் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு நன்றி கூறியதுடன், மிகுந்த உற்சாகத்துடன் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும், கழகத்திடமிருந்து கற்றுக்கொண்டு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்க விரும்புவதாகவும் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
2024 நவம்பரில் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற நடால், ரியல் மட்ரிட் தலைவர் புளோரன்டினோ பெரெஸின் எதிர்கால வாரிசாகப் பலமுறை பேசப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




