தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்காத கோயில் நிர்வாகம்? மாவட்ட ஆட்சியர் அறிக்கையால் பரபரப்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருக்கு கோயில் நிர்வாகம் உரிய அனுமதி வழங்காததே, அங்கு தீபம் ஏற்றப்படாததற்குக் காரணம் என மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாததற்கு மன்னிப்பும் கோரியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருவிழாவான நவம்பர் 24ஆம் திகதி ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதியளித்து கடந்த நவம்பர் 20ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக மதுரை மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டதுடன், உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய, மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்றம் நவம்பர் 20ஆம் திகதி பிறப்பித்த உத்தரவின்படி, கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கமைய, தீபம் ஏற்றுவதற்கான நேரம், 10 பேர் கொண்ட குழுவினரின் விபரங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகம் தயார்படுத்தியிருந்தது.
எனினும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருக்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. குறித்த 10 பேர் கொண்ட குழுவுக்கு அனுமதி கோரி நவம்பர் 22ஆம் திகதி கோயில் செயல் அலுவலர் அறங்காவலர் குழுவை அணுகியதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நவம்பர் 24ஆம் திகதி அறங்காவலர் குழுவின் அனுமதி கிடைத்த பின்னரே முன்னேற்பாடுகளையும் தீபம் ஏற்றும் நிகழ்வையும் ஆரம்பிக்க முடியும் என கோயில் செயல் அலுவலர் தமக்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அனுமதி வழங்குவது தொடர்பாக மாலை 3.47 மணிக்கும், மீண்டும் மாலை 5.03 மணிக்கும் நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட குழுவினரைக் கொண்டு உடனடியாக தீபம் ஏற்றுமாறும், ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் தமக்கோ அல்லது காவல் ஆணையருக்கோ உடனடியாக அறிவிக்குமாறும் கோயில் செயல் அலுவலருக்கும் தேவஸ்தானத்துக்கும் அறிவுறுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அன்றிரவு 8.30 மணியளவில் கிடைத்த தகவலின்படி, அறங்காவலர் குழு தீப மண்டபத்தில் (உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள வழக்கமான இடம்) மகா தீபத்தை ஏற்றுவதற்கு முடிவெடுத்திருந்ததாக நிர்வாக அதிகாரி மூலம் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாலை 6 மணியளவில் வழக்கமான தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டதாகவும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குத் தகுதியான நபர்கள் தொடர்பில் தேவஸ்தானம் எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவுக்குப் பதிலாக வேறொரு குழுவை மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்க முடியாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதற்கு தான் தொடர்ச்சியாக நல்லெண்ணத்துடன் செயற்பட்டதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறவில்லை என்றும் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான கூடுதல் ஆவணங்களுடன் துணை அறிக்கையொன்றையும் தாக்கல் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் தமிழக அரசின் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கறிஞர் வி. ராமசுப்பு நீதிமன்ற அவமதிப்பு மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.




