தமிழக அரசியலில் மையங்கொண்டுள்ள ‘ஆபாச குறுஞ்செய்தி’ புயல்: CBI விசாரணை கோரி மனு
தமிழகம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷைக் கைது செய்யவும், மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாகச் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஜூலை 31ஆம் திகதி தலைமைச் செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்டும், சுமார் நான்கு மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும், சட்டத்துறை அமைச்சர் இவ்விவகாரத்தைத் தனிப்பட்ட பிரச்சினையாகக் குறிப்பிட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களைத் தாக்கியதாகச் சட்டமன்றத் துணைத் தலைவர் மீது எழுந்துள்ள புகார், ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் மற்றும் காவல், நீதிமன்றக் காவலில் இடம்பெற்ற குறைந்தது ஒன்பது மரணங்கள் குறித்தும் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.




