பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதி ஆபிரிக்காவில் மரணம்: பின்னணி குறித்து அதிர்ச்சி தகவல்
இலங்கையைச் சேர்ந்த அகதியும், பாலியல் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவருமான 35 வயதுடைய கிஷாந்த் பெரமாலியாவை, அவருக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத ஆபிரிக்க நாடான எஸ்வத்தினிக்கு (முன்னர் சுவாசிலாந்து) பிரித்தானியா வலுக்கட்டாயமாக அனுப்பியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கடுமையான மனநலப் பாதிப்புகளையும் தற்கொலை முயற்சிகளின் பின்னணியையும் கொண்டிருந்த அவர், எஸ்வத்தினிக்குச் சென்ற சில மாதங்களுக்குப் பின்னர், கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக இரு அரசாங்கங்களுக்கும் இடையில் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் வரைவை பிபிசி பெற்றுள்ளது.
அதன்படி, அவரது தங்குமிடம், மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை மூன்று ஆண்டுகள் வரை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள இணங்கியிருந்தது. எனினும், இந்த ஒப்பந்தம் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கோ எஸ்வத்தினி மக்களுக்கோ அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடாவுக்குக் கடல் மார்க்கமாகப் பயணிக்க முயன்ற இலங்கை அகதிகள் குழுவினருடன் கிஷாந்த் பெரமாலியாவும் இருந்தார். இந்தியப் பெருங்கடலில் அவர்களை மீட்ட பிரித்தானிய கடற்படையினர், டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைத்தனர்.
இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது பாதுகாப்பானதல்ல எனத் தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டபோதும், மூன்று ஆண்டுகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்தத் தடுப்புக்காவல் சட்டவிரோதமானது என பின்னர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இளம் வயதில் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதைக்கும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் கிஷாந்த் பெரமாலியாவுக்கு, பின்னர் மன அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு (PTSD) கண்டறியப்பட்டது. டியாகோ கார்சியாவில் இருந்தபோது அவரது மனநிலை மேலும் பாதிக்கப்பட்டதுடன், பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதற்கிடையில், தாக்குதல், தீவைப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்த அவர், நான்கு பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்டிருந்தார்.
2024ஆம் ஆண்டு ஏனைய இலங்கை அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டபோதும், குற்றப் பின்னணி காரணமாக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரைத் தங்க வைப்பதற்காக 20க்கும் மேற்பட்ட நாடுகளை பிரித்தானியா அணுகியபோதும் இணக்கப்பாடு கிடைக்கவில்லை.
பின்னர், 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாலைதீவுக்கு மாற்றப்பட்ட அவர், அங்கிருந்து எஸ்வத்தினிக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆரம்பத்தில் தனிமைப்படுத்தப்பட்ட விருந்தினர் விடுதியொன்றில் தனியாகத் தங்கவைக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது மனநலம் மோசமடைந்ததுடன், தனிமையில் வாழ முடியாமல் தவித்ததாகவும், எஸ்வத்தினிக்கு அனுப்பப்பட்ட நிரந்தர ஏற்பாடு குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் அவரது சகோதரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கை எஸ்வத்தினியின் குறைந்தளவிலான சுகாதார வளங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் மனித உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன. உலக நாடுகளின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஆபிரிக்க நாடுகள் மீது சுமத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலளித்துள்ள பிரித்தானிய அரசாங்கம், அந்நாட்டு மக்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை என்றும், இந்த விவகாரம் தொடர்பில் எஸ்வத்தினி அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.




