IPL ஏலத்துக்குத் தயாராகும் கிரிக்கெட் உலகம்: 1,220 வீரர்கள் களத்தில்
2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்காக ஏழு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க ஆகியோர் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி இந்திய ரூபா பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பிரிவில் மொத்தமாக 30 வீரர்கள் பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் இருவர் இந்திய வீரர்கள் என்றும் ஏனைய 28 பேரும் வெளிநாட்டு வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய ஐந்து இலங்கை வீரர்களான சரித் அசலங்க, துஷ்மந்த சமீர, குசல் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன மற்றும் சோனல் தினுஷ ஆகியோர் ஒரு கோடி இந்திய ரூபா அடிப்படை விலைப் பிரிவில் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை அணிகளுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப வீரர் பட்டியலில், 939 இந்திய வீரர்கள் மற்றும் 281 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1,220 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இறுதி ஏலத்துக்கு முன்னர் இந்தப் பட்டியல் மேலும் குறைக்கப்படும்.
இதேவேளை, இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸும் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி கோவாவில் நடைபெறவுள்ள மினி ஏலத்தில் பங்கேற்பதற்காக 2 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையில் பதிவு செய்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஓய்வுபெற்ற பென் ஸ்டோக்ஸ், ஐ.பி.எல். தொடரில் ரைசிங் புனே சுப்பர்ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
ஐந்து பருவகாலங்களில் 45 போட்டிகளில் பங்கேற்று 935 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், 28 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
மேலும், பங்களாதேஷைச் சேர்ந்த 12 வீரர்களும் இம்முறை ஏலத்தில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர். எனினும், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ஷகிப் அல் ஹசன் போன்ற முன்னணி வீரர்கள் ஆரம்பப் பட்டியலில் இடம்பெறவில்லை.
பங்களாதேஷ் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை, இந்தியா – பங்களாதேஷ் இடையிலான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்ட சர்ச்சையை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) அறிவுறுத்தலையடுத்தே அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஆரம்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 1,220 வீரர்களில் 184 பேர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள், 170 பேர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 42 பேர் இணை உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஆவர்.
அத்துடன், கடந்த ஐ.பி.எல். பருவகாலத்தில் விளையாடிய சர்வதேச அனுபவமற்ற 127 இந்திய வீரர்கள், ஏனைய 628 சர்வதேச அனுபவமற்ற இந்திய வீரர்கள் மற்றும் 69 சர்வதேச அனுபவமற்ற வெளிநாட்டு வீரர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஆரம்பப் பட்டியலில் இடம்பெறாத மேலதிக வீரர்களைச் சேர்ப்பதற்கான கோரிக்கைகளை நவம்பர் 27ஆம் திகதி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு அணிகளுக்கு பி.சி.சி.ஐ அறிவுறுத்தியுள்ளது. ஏலத்தில் சேர்க்க விரும்பும் வீரர்களின் பெயர்களை டிசம்பர் 1ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கவும் அணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.




