தொலைபேசி உளவு முதல் ஏவுகணைவரை: இந்தியா – இஸ்ரேல் உறவின் மர்மம் என்ன?
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மூலோபாய உறவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியையும் தாண்டி நீண்டகாலமாகத் தொடரக்கூடிய வகையில் வலுப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகமான அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, உளவுத்துறைத் தகவல் பரிமாற்றம், தொலைபேசி கண்காணிப்புத் தொழில்நுட்பம், ஆயுத உற்பத்தி மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு விரிவடைந்துள்ளதாக அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், இஸ்ரேலுடனான வலுவான உறவைப் பேணுவதற்கு ஆதரவாக இருப்பதாக அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி அண்மையில் வெளியிட்ட கருத்தில், காஸா மீதான இஸ்ரேலின் போரை விமர்சித்ததுடன், இந்தியாவின் மூலோபாய நலன்களைக் கருத்திற்கொண்டு இஸ்ரேலுடனான வலுவான உறவைத் தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரையில், இந்தியா, இஸ்ரேலின் முக்கிய ஆயுதக் கொள்வனவாளராக உருவெடுத்துள்ளது. ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து வருகின்றன.
அத்துடன், இந்தியாவின் ஹைதராபாத்தில் இஸ்ரேலிய நிறுவனங்களுடன் இணைந்து ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் வெளிப்படையாகவும் வேகமாகவும் விரிவடைந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், இந்த ஒத்துழைப்புக்கான அடித்தளம் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்திலேயே உருவாக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா – இஸ்ரேல் உறவு அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையிலானதா அல்லது இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டதா என்பது தொடர்பில் ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்துகள் காணப்படுவதாகவும் அல் ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.




