இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு பிரித்தானியா தொழில்நுட்ப உதவி
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், வர்த்தக வசதிகளை வலுப்படுத்துவதற்கும் பிரித்தானியாவின் தொழில்நுட்ப உதவிகளையும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இரு நாடுகளின் சுங்கத் திணைக்களங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது
உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக வசதிப்படுத்தல் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமெனக் கூறப்படுகின்றது.
மேற்படிஉத்தேச ஒப்பந்தத்தின்கீழ் தொழில்நுட்ப உதவிகள், பயிற்சித் திட்டங்கள், செயலமர்வுகள், அறிவுப் பகிர்வு மற்றும் கல்விசார் விஜயங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஆற்றல் மேம்படுத்தப்படுவதுடன், வர்த்தக வசதிப்படுத்தல் நடவடிக்கைகளைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.




