உயர்கல்விக்கான வாய்ப்புகள் பறிப்பு: ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு பிரித்தானியாவில் கதவடைப்பு
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் பிரித்தானியாவில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் விசா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது கல்விக் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மாணவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
காபூலைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளரான ஷஹீரா சாதத் (Shahira Sadat), பிரித்தானிய அரசாங்கத்தின் செவனிங் (Chevening) புலமைப்பரிசில் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பைப் பெற்றபோது, தனது நீண்டகாலக் கல்விக் கனவு நனவாகும் என நம்பியிருந்தார்.
தலிபான்களின் கட்டுப்பாடுகள், மின்சாரம் மற்றும் இணையத் தடைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மூன்று ஆண்டுகளாகப் போராடி, பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை அவர் தயாரித்திருந்தார்.
சசெக்ஸ், பிராட்போர்ட் மற்றும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர அவருக்கு அனுமதி கிடைத்திருந்தது.
எனினும், ஆப்கானிஸ்தான், கமரூன், மியன்மார் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி விசாக்களை இடைநிறுத்தும் அவசர நடவடிக்கையைப் பிரித்தானிய உள்துறை அமைச்சு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.
இந்த நாடுகளிலிருந்து கல்வி விசா மூலம் பிரித்தானியாவுக்குச் சென்று பின்னர் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தியர்களுக்கான திறன்மிக்க தொழிலாளர் விசாக்களும் இடைநிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக, ஆப்கானிஸ்தியப் பெண்ணான சாதத் பிரித்தானியாவில் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பை இழந்தார். இது குறித்து தகவல் கிடைத்தபோது பல மணி நேரம் அழுததாகவும், கல்வி வாய்ப்பு மட்டுமன்றி தனது தொழில் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் இழந்துவிட்டதாக உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரைச் சேர்ந்த அலியா என்ற பெண்ணுக்கும் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனது பெயரை வெளியிட விரும்பாத அவர், பிரித்தானியாவில் டிஜிட்டல் ஊடகத் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடரப் பெற்றிருந்த அனுமதி ரத்துச் செய்யப்பட்டதால், எதிர்காலம் குறித்த நம்பிக்கை இழந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் உயர்நிலைப் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான வேலைவாய்ப்புகளும் மறுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில், வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறுவதிலும் ஆப்கானிஸ்தியப் பெண்கள் பல தடைகளை எதிர்கொள்கின்றனர். ஆங்கில மொழித் தேர்வுக்குத் தயாராவதற்காக இரகசியக் கல்வி நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. சில நிலையங்கள் அதிகாரிகளால் மூடப்பட்டதைத் தொடர்ந்து இணையவழிக் கல்வியை நாடியுள்ளனர்.
மேலும், ஆங்கில மொழித் தேர்வுகளை நடத்தும் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் பெண்கள் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தானில் பெற்ற பட்டப்படிப்புகளை அங்கீகரிக்கத் தயாராக இருக்கும் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களைக் கண்டறிவதும் சவாலாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பிரித்தானிய உள்துறை அமைச்சு, ஆப்கானிஸ்தியப் பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்ளிட்ட அகதிகளுக்கான மீள்குடியேற்றத் திட்டத்தை மீண்டும் திறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அகதிகளுக்கான கல்வி வழிகள் மற்றும் பெயரிடப்பட்ட அனுசரணைத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
எனினும், அகதிகளாக வகைப்படுத்தப்படாத ஆப்கானிஸ்தியப் பெண்களுக்கும் இந்த வாய்ப்புகள் கிடைக்குமா என்பது தொடர்பில் தெளிவான பதில் வழங்கப்படவில்லை.
பிரித்தானிய உயர்கல்வி புள்ளிவிபரங்களின்படி, 2024–2025 கல்வியாண்டில் அங்கு கல்வி பயின்ற 6 இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களில் 400க்கும் குறைவானவர்களே ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
2021ஆம் ஆண்டு முதல் 2025 செப்டெம்பர் வரையான காலப்பகுதியில், ஆப்கானிஸ்தியர்களின் புகலிடக் கோரிக்கைகளின் எண்ணிக்கை வழங்கப்பட்ட கல்வி விசாக்களின் எண்ணிக்கையில் 95 சதவீதத்தை எட்டியுள்ளதாகப் பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்குச் சென்று பின்னர் புகலிடம் கோரிய ஆப்கானிஸ்திய மாணவியான ஸைனப் ரெஸாயி, தலிபான்களின் ஆட்சிக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தினால் புகலிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
எக்ஸெட்டர் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் கலாநிதிப் பட்டப்படிப்பைத் தொடரும் அவர், ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களது அன்றாடச் செயற்பாடுகளைக்கூட திட்டமிட்டே மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, ஏனைய நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என ஆப்கானிஸ்தியப் பெண்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சர்வதேச சமூகம் தங்களுக்கான கல்வி வாய்ப்புகளைப் படிப்படியாக மூடி வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.




