இலங்கை, தாய்லாந்துக்கிடையில் விசா குறித்து முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையும், தாய்லாந்தும் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான நுழைவிசைவு விலக்கு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையே நுழைவிசைவு இல்லாமல் பயணம் செய்வதற்கு வழிவகுக்கிறது.
தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சிஹாசக் புவாங்கேட்கியோவின் இலங்கைக்கான பயணத்தின் போது இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று ஜனாதிபதி செயலகத்தில், தாய்லாந்து பிரதி பிரதமருடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்.
இதன்போது கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தை எளிதாக்குவதோடு, மக்கள் உறவுகளை வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி கூறினார்.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்துவதில் இந்த உடன்பாடு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும்,ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.




