மக்கள் போராட்டங்களை ஒடுக்கவே அடக்குமுறைச் சட்டமூலம்
மக்கள் போராட்டங்களை ஒடுக்கி, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலேயே அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது. எனவே, சர்வதேச சக்திகளுடன் இணைந்து அடக்குமுறைச் சட்டங்களைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையிலும் நிச்சயமாகத் தாக்கத்தை ஏற்படுத்தும். மனித உரிமை அமைப்புகள் குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தமது ஆட்சியை மக்கள் நல அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தி, எதற்காக அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருகின்றது? மக்கள் நல அரசாங்கமாக இருந்தால், அடக்குமுறைச் சட்டங்கள் அவசியமில்லை.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டபோது, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவை கொண்டுவரப்படும் என நாம் எச்சரித்திருந்தோம். தற்போது அவ்வாறே நடந்துள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராகக் கருத்து வெளியிடுபவர்களை ஒடுக்கவும், மக்கள் எழுச்சிகளையும் போராட்டங்களையும் முடக்கவுமே இத்தகைய அடக்குமுறைச் சட்டங்கள் தேவைப்படுகின்றன.
நாட்டில் பயங்கரவாதமோ அல்லது கிளர்ச்சியோ இல்லாத நிலையில், இத்தகைய சட்டங்கள் எதற்காகக் கொண்டுவரப்படுகின்றன?
சர்வதேச சக்திகளுடன் இணைந்து அடக்குமுறைச் சட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி தோற்கடிக்கும்” என்றார் முஜிபுர் ரஹ்மான்.




