சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் ஆபிரிக்க சம்பியனானது செனகல்
செனகல் அணியின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு, மொராக்கோவுக்கு சாதகமாக முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்பை விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் (CAS) இரத்துச் செய்துள்ளது.
கடந்த ஜனவரி 18ஆம் திகதி மொராக்கோவின் ரபாத் நகரில் நடைபெற்ற ஆபிரிக்க கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் செனகல் அணி மேலதிக நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
எனினும், போட்டியின் இறுதிக் கட்டத்தில் மொராக்கோவுக்கு வழங்கப்பட்ட பெனால்டி முடிவை எதிர்த்து செனகல் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியதால் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து, ஆபிரிக்க கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (CAF) கடந்த மார்ச் மாதம் செனகலின் வெற்றியை இரத்துச் செய்து, மொராக்கோவுக்கு 3-0 என்ற அடிப்படையில் வெற்றியை வழங்கியிருந்தது.
இதனை எதிர்த்து செனகல் மேல்முறையீடு செய்த நிலையில், நடுவர் போட்டியை மீண்டும் தொடர அனுமதித்தமை அவரது அதிகாரத்திற்கு உட்பட்ட தீர்மானம் எனக் குறிப்பிட்ட சர்வதேச நடுவர் நீதிமன்றம், செனகலின் வெற்றியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டரீதியான அனைத்து வழிகளையும் பயன்படுத்தப்போவதாக மொராக்கோ கால்பந்தாட்டச் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடைமுறைப்படுத்துவதாக ஆபிரிக்க கால்பந்தாட்டக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.




