போரை எதிர்த்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை
உக்ரைன் மீதான போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும், ‘யாப்லோகோ’ (Yabloko) கட்சியின் துணைத் தலைவருமான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு (Lev Shlosberg) 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரஷ்ய ராணுவத்தைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பியமை மற்றும் இழிவுபடுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், பிஸ்கோவ் (Pskov) நகரில் உள்ள நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என இணைய விவாதத்தில் வலியுறுத்தியமைக்காகவும், பிரித்தானியப் பத்திரிகையின் அட்டையை ( புடினின் கைகளில் ரத்தக்கறை இருப்பது போன்ற படம்) தனது ரெலிகிராம் பக்கத்தில் பகிர்ந்ததற்காகவும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆற்றிய தனது இறுதி உரையில், “மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் முழுமையான அழிவை நோக்கி ரஷ்யா பயணித்து வருகிறது” என்று கூறிய ஷ்லோஸ்பெர்க், போரின் உண்மையான இழப்புகள் தெரியவரும் போது ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியடையும் எனத் தெரிவித்தார்.
இத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ள ‘யாப்லோகோ’ கட்சி, தாயகத்தின் மீதான அன்புக்கும், போர்நிறுத்தக் கோரிக்கைக்கும் வழங்கப்பட்ட கொடூரமான தண்டனை இது எனக் குறிப்பிட்டுள்ளது.




