ரஷ்யாவின் குண்டுவீச்சு விமானம் விபத்து – 06 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவின் அமூர் பகுதியில் குண்டுவீச்சு விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிப் பறப்பின்போது மக்கள் வசிக்காத பகுதியில் அந்த ராணுவ விமானம் விழுந்ததாகவும், அது வெடிமருந்துகளை ஏற்றிச் செல்லவில்லை என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அதேநேரம் ரஷ்ய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, உக்ரைன்கா விமானத்தளத்திலிருந்து குண்டுவீச்சு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கிராஸ்னோயரோவோ Krasnoyarovo கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரிகள் குற்றவியல் வழக்கொன்றை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ரஷ்யாவின் விண்வெளிப் படைகளின் புலனாய்வுக் குழு ஒன்று விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.




