மரணத்தை வெல்லும் முயற்சியில் புடின்? குரங்குகளிடம் ஆய்வு நடத்தும் ரஷ்யா
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீடிக்கச் செய்யும் நோக்கில், நீண்டகாலம் உயிர்வாழும் குரங்குகளின் இரத்த மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுகளை முன்னெடுக்கும் திட்டம் ரஷ்யாவில் கவனம் பெற்றுள்ளது.
ரஷ்யாவின் குர்ச்சடோவ் (Kurchatov) அறிவியல் நிறுவனமும், பெட்ரோவ்ஸ்கி ரஷ்ய அறுவை சிகிச்சை ஆராய்ச்சி மையமும் இணைந்து, நீண்டகாலம் உயிர்வாழும் விலங்கினங்களின் இரத்த மாதிரிகளைச் சேகரிக்கும் வங்கியொன்றை உருவாக்கியுள்ளன.
முதுமை எவ்வாறு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிவதுடன், மனிதர்களின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
குர்ச்சடோவ் நிறுவனத்தின் தலைவர் மிகைல் கோவல்சுக் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வில், 22 வகைகளைச் சேர்ந்த 7,000 இற்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ள நிறுவனத்தின் வளர்ப்பு மையங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, 18 வயது முதல் 30 வயதைக் கடந்த முதிய குரங்குகளின் இரத்த நாளங்கள், மூளை மற்றும் ஏனைய உடல் உறுப்புகளின் நிலை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நீண்டகாலம் உயிர்வாழும் குரங்குகளிடமிருந்து பெறப்படும் இரத்த மாதிரிகளைச் சேகரித்து, முதுமைக்கான உயிரியல் காரணிகளைக் கண்டறிவதற்கும், மனிதர்களின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்குவதற்கும் விஞ்ஞானிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இதற்கிடையில், மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழக்கூடிய சாத்தியம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்கனவே ஆர்வம் வெளியிட்டிருந்தார்.
கடந்த 2025ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் இடம்பெற்ற உரையாடலின்போது, உயிரித் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் மனித உறுப்புகளை மாற்றுவதற்கும், மனித ஆயுளை நீடிப்பதற்கும் எதிர்காலத்தில் சாத்தியங்கள் ஏற்படலாம் என புடின் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், குரங்குகளின் இரத்த மாதிரிகள் தொடர்பான இந்த ஆய்வு புடினின் தனிப்பட்ட ஆயுளை நீடிப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்கான நேரடி ஆதாரங்கள் வெளியாகவில்லை.




