யாழ்ப்பாணத்தில் 187 ஏக்கருக்கும் அதிகமான காணி விடுவிப்பு
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் அரச சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி, எதிர்கால பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாப்புப் படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறித்த காணியை உற்பத்திப் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை மேற்கு, கிராம உத்தியோகத்தர் பிரிவு J/233 இல் அமைந்துள்ள குறித்த காணி, 1997ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
குறித்த காணியை விடுவிப்பதற்கான தொடர்புடைய உத்தியோகபூர்வ ஆவணங்கள், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் – பலாலி சிவில் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி கேர்ணல் W. M. A. M. நிஸ்ஸங்கவினால் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு. M. பிரதீபன் அவர்களிடம் யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து புதன்கிழமை (செப்டெம்பர் 30) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
187.56 ஏக்கர் காணியை விடுவிக்கும் நடவடிக்கையானது, காங்கேசன்துறையில் முன்மொழியப்பட்டுள்ள முதலீட்டு வலயத்திற்காக அரச காணியைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் அப்பகுதியில் எதிர்கால முதலீடுகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
வடக்கில்முன்னதாக பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த அரச காணிகளை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு வசதியளிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இக்காணி உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




