மன்னிப்புகோரி அடிபணிய ராஜபக்சக்கள் தயாரில்லை – மொட்டு கட்சி
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ராஜபக்சக்கள் ஒருபோதும் மன்னிப்பு கோரப்போவதில்லை. அவர்களுக்கு இயற்கை நீதியை பெற்றுக்கொடுக்கும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியில் சவால்மிக்கவர்தான் நாமல் ராஜபக்ச. அதனால்தான் அவருக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.நீதித்துறையின் சுயாதீனம்மீது எமக்கு நம்பிக்கை உள்ளது.
எனவே, சட்டரீதியாக போராடுவோம். நாம் சிங்கள, பௌத்த மக்கள். இயற்கை நீதியை நம்புபவர்கள். இயற்கை நீதியை வழங்கும் என நம்புகின்றோம்.
போலி குற்றச்சாட்டுகள்மூலம் ராஜபக்சக்களை ஒடுக்க முடியாது. இந்த அரசாங்கத்திடம் மன்னிப்புகோரி மண்டியிடப்போவதில்லை. அரசாங்கத்திடம் அல்ல, மக்களுடன்தான் எமக்கு அரசியல் ஒப்பந்தம் உள்ளது.
இந்த அரசாங்கம் பெயில் என்பது தெரியும்;. அதனால்தான் கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர்.” – என்றார்.




