இலங்கையில் போர்க்களமானது புனித பூமி: உடைந்தது பிக்குவின் மண்டை
அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளின் ஆதரவாளர்களுக்கும், ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளருக்கு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து, அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையிலேயே, தமது இரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை நீர் மற்றும் உணவு உள்ளிட்ட எதனையும் உட்கொள்ளாமல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கஸ்ஸப தேரர் நேற்று முதல் அறிவித்துள்ளார். அவருடன் மேலும் இரண்டு தேரர்களும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் புத்தசாசனத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு இன்று வருகை தந்தனர்.
இதன்போது, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினருக்கும், ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.
இந்த மோதலின்போது, போராட்ட இடத்தில் கூடியிருந்த சிலர் தடிகளால் தாக்கியதில் ராஜாங்கனை சத்தாரதன தேரரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சிகளில், சிலர் தடிகளை ஏந்தியவாறு மற்றைய தரப்பினர் மீது தாக்குதல் நடத்துவதும், மோதல் தீவிரமடைவதும் பதிவாகியுள்ளன.
இச்சம்பவத்தால் ருவன்வெலிசாய வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.




