ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்; சீனாவுடன் வர்த்தக பேச்சு: சமநிலை தேடும் ஆஸ்திரேலியா

கடந்த நான்கு ஆண்டுகளில் கருத்து வேறுபாடுகள் நிலவிய போதிலும், ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு முழுமையாக சீரடைந்துள்ளதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் கருத்து வேறுபாடுகள் நிலவிய போதிலும், ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு முழுமையாக சீரடைந்துள்ளதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுடனான சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் சுமுக நிலைக்குக் கொண்டுவருவதில் கூட்டாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷென்சென் நகரில் இன்று நடைபெற்ற ஆசிய–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டுக்கு இடையிலான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பும் தொடர்ந்து ஆழமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஷி ஜின்பிங், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதுடன், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உறவுகளை சீரமைக்க கடுமையாக உழைத்தோம் – அல்பானீஸ்

சீன ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், சீனாவுடனான உறவுகளை சீரமைப்பதற்கு தனது அரசாங்கம் கடுமையாக உழைத்துள்ளதாகக் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளியான சீனாவுடனான உறவை நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் வெவ்வேறு அரசியல் கட்டமைப்புகள் மற்றும் வரலாறுகள் இருந்தாலும், கருத்து வேறுபாடுகளைத் தாண்டி ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் எனவும், அவுஸ்திரேலியா அதனையே விரும்புவதாகவும் அல்பானீஸ் தெரிவித்தார்.

உக்ரைன் போரை நிறுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் வலியுறுத்தியமை குறித்தும் கருத்து தெரிவித்த அவர், ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்ற ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்ததாகக் குறிப்பிட்டார்.

சீனாவுக்கு அதிருப்தியளிக்கும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள்

சீனாவுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா சில முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

பிலிப்பைன்ஸுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய ஒப்பந்தம், இராணுவ உறவுகள், கடல்சார் கண்காணிப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் தலைவர்களுடன் இணைந்து பிராந்தியத்தில் புதிய கூட்டுப் பயிற்சியை முன்னெடுப்பதற்கான திட்டங்களிலும் அல்பானீஸ் பங்கேற்றுள்ளார்.

அதேவேளை, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதன் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்கான அமெரிக்கா தலைமையிலான ஒப்பந்தத்திலும் ஆஸ்திரேலியா இணைந்துள்ளது.

சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தொழில்நுட்பப் போட்டியில் முன்னிலை பெறும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இந்த ஒப்பந்தம் ஆதரவளிப்பதாகக் கருதப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி